Prof

Wednesday, February 17, 2016

Tamil short story

புரிதல் (சிறுகதை)
Hafsa Abdul Aleem
14/02/2016
"ஷர்மி..!"அன்வர் அழைத்தான்.அறைக்குள் எதோ வேலையாய் இருந்த ஷர்மிளா அவற்றை அப்படியே போட்டுவிட்டு அவனிடம் வந்தாள்.
"மணி 2 ஆகுதே, பசிக்குது madam சாப்பாடு வைங்க!" என்றான். 'ம்ம் சரி' என்று சமையலறைக்குள் நுழைந்து பிளேட்டுக்களை கழுவினாள் ஷர்மிளா.
இன்று சனிக்கிழமையாதலால் அன்வர் வீட்டில் இருந்தான். அவன் ஓர் கம்ப்யூட்டர் இன்ஜினியர். தலைநகரில் பிரபல நிறுவனத்தில் வேலை. ஷர்மிளா உயர்தரம் விஞ்ஞானம் வரை கற்றவள். வீட்டுக்கு ஒரே மகள். யுனிவசிட்டி கிடைத்தும்கூட பெற்றோர் அனுப்ப விரும்பவில்லை.அவள் சம்மதத்துடன் திருமணம் செய்து வைத்தனர். சில வாரங்களிலேயே தனிக் குடித்தனம்!
திருமணத்திற்குப் பின்னர்தான் அவள் மெதுமெதுவாய் சமைக்கக் கற்றுக் கொண்டாள். இன்டர்நெட்டில் ஏதாவது புதிய உணவு வகைகளை செய்துபார்ப்பதில் அவளுக்கு ஆர்வம் அதிகம். அவனுக்கும் அது பிடிக்கும்.
ஏதாவது புதிய dish செய்தால் அவனிடம் கொடுத்து அவன் comments ஐக் கேட்கவேண்டும். அவனும் சிரித்துக் கொண்டே நான் தானே கிடைச்சேன் 'Guinea Pig' என்று சாப்பிடுவான். கூடவே சாப்பிடும் அவளுக்கு அதன் சுவை நன்றாய் இருக்கும்போது அவனிடம் கேட்பாள். 'சாப்பாடு எப்பிடி?'
அவன் 'நல்லாருக்கு!'
அவள் 'அப்போ ஏன் நல்லாருக்குன்னு சொல்லலை?’
அவன் 'ஒண்டுமே சொல்லலை என்றால் நல்லாருக்கு என்று அர்த்தம்..!' முதல் தடவை அவன் பாராட்டை எதிர்பார்த்தவளுக்கு ஒருமாதிரியாகிவிட்டது.
அவளைப் பற்றி...
அவள் இயற்கையின் காதலி! பனித்துளிகளின் பாஷைகளை மொழிபெயர்க்க முனைகிறவள். காக்கா கரைவதைக்கூட கண்கொட்டாமல் பார்ப்பவள். சின்னச் சின்ன இன்பங்களில் சிலிர்த்துப் போகிறவள். ஒரு சின்னப் பாராட்டே அவளை ஊக்கப்படுத்திவிடும். நிறைய வாசிக்கப் பிடிக்கும் அவளுக்கு. எத்தனைதான் மறைத்தாலும் மனதிலுள்ளதைக் காட்டிக் கொடுக்கும் முகம் அவளுக்கு!. கல்யாணம் கணவன் என கற்பனை கோட்டைகளை அடுக்கியிருந்தாள்.
இனி அவன்...
கம்ப்யூட்டருக்குத் தாலி கட்டியிருந்தான். Laptop உம் mobile phone உமே அவன் உலகங்கள். அவனுக்கு வாசிப்பதில் அவ்வளவு interest கிடையாது. Video lectures ஏதாவது பார்த்துக்கொண்டிருப்பான். மனசுக்குள் எரிமலையே வெடித்தாலும் சலனம் காட்டாத முகம் அவனுக்கு! ஒரே வார்த்தையில் சொல்வதாயிருந்தால் அவன் ஓர் சாதாரணன். A real practical man!
திருமணமான புதிதில் அன்வரின் இந்தக் குணம் ஷர்மிளாவுக்கு ஏமாற்றமாக இருந்தது. சின்னச் சின்ன விஷயங்களுக்கெல்லாம் கூட அவன் பாராட்டமாட்டானா என எதிர்பார்ப்பாள். சாப்பாட்டில் ஏதும் குறை சொன்னால் சண்டைதான்! "நல்லா இருந்தா மட்டும் வாயை மூடிட்டு திண்ணத் தெரியுது! ஒரு நாளைக்கு ஒன்று குறைஞ்ஞா போதும் அதை மட்டும் சொல்லி ஏன்ட மனச நோகடிங்க!" என்பாள்.
அதற்கும் அவன் பதில் வைத்திருந்தான். " இப்போ அதை சொல்லிக் காட்டினால்தானே next time சமைக்கும்போது கொறயில்லாம கவனமா இருப்பிங்க! இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்தையும் தெரிஞ்சுகொள்றது ! "
அவள் சொல்வாள் "போங்க! இந்த ஆம்பிளைகளே இப்படிதான்! நன்றி கெட்ட ஜென்மங்கள்!".
ஷர்மிளாவுக்கு தொடர்ந்து டயரி எழுதும் பழக்கமில்லை. எப்போதாவது மனதை நெகிழச் செய்யும் சம்பவம் ஏதும் நடந்தாலோ அல்லது மனசு பாரமாக இருந்தாலோ எழுதி வைப்பாள். அந்த எழுத்துக்கள் அவள் துயரத்திற்கு வடிகால். அன்றும் எழுதினாள் இவ்வாறு ...
உங்களுக்கு மட்டுமேயான
தனித்தன்மைகளில் இதுவும் ஒன்றா
யா ரஸூலுல்லாஹ்?
அத்தனைப் புளிக்கின்ற திராட்சைகளையே
சற்றும் முகம் சுழிக்காமல்
சாப்பிட்டீர்கள்! இங்கே
சற்றே உப்புக் கூடிவிட்டால்
அரை மணி நேரம் லெச்ஷர் எடுக்கும்
சமுதாயத்தில் வாழ்கிறேன் நான்!
நாட்களும் வேகமாய் நகர்ந்தன.அவர்கள் திருமணம் முடிந்து இரண்டரை ஆண்டுகள் கடந்துவிட்டிருந்தன. அவனுடனான இந்தக் குடும்ப வாழ்க்கை அவளை நிறையவே மாற்றியிருந்தது. மெல்ல மெல்ல அவன் மனதைப் புரிந்துகொள்ள முயன்றாள். தோற்றத்தில் ஒரே மாதிரியே இருக்கும் identical twinsகளில் கூட கூர்ந்து அவதானித்தால் நன்றாய் வித்தியாசம் விளங்குகிறதே. அப்படி இருக்கையில் எங்கோ இருக்கும் ஓர் தம்பதிக்குப் பிறந்த ஓர் ஆணும் யாரோ ஓர் பெற்றோருக்குப் பிறந்த பெண்ணும் அதாவது முற்றிலும் சம்பந்தமேயில்லாத இரு வேறு குடும்பத்தில் வளர்ந்தவர்கள் 100% ஒருவரோடொருவர் ஒத்துப்போகவேண்டுமென எதிர்பார்ப்பது எந்த விதத்தில் நியாயமாக முடியும்?
யோசித்துப் பார்த்தாள்…அன்வர்! நல்லவன். குறிப்பிட்டுச் சொல்ல எந்தவிதமான கெட்ட பழக்கமும் கிடையாது.வெளியே காட்டத் தெரியாவிட்டாலும் அவளை ஆழமாய் நேசிப்பவன். வீட்டு வேலை சமையல் வேலைகளில் அவ்வப்போது உதவிகள் செய்வான். கேட்காமலேயே அவள் தேவைகள் அறிவான். அவளுக்கு முழுச் சுதந்திரமும் தந்திருந்தான். கண்ணியமாய் நடந்துகொள்பவன்! அவன் அருகாமை அவளுக்கு ஆறுதலைத் தந்தது. அவன் இல்லா ஓர் வாழ்கையை நினைத்துப்பார்க்கவே பயங்கரமாய் இருந்தது. உடலாலும் உள்ளத்தாலும் அவனுக்கு நெருக்கமாகிவிட்டிருந்தாள்.  உலகிலே ஆங்காங்கே நடக்கின்ற சம்பவங்களையெல்லாம் கேள்விப்படும்போது தன் கணவனை நினைத்து அடிக்கடி அவள் மனதார கோடிமுறை இறைவனுக்கு நன்றி கூறிக்கொள்வாள். அல்ஹம்துலில்லாஹ்! ஒருவேளை அன்வர் சொல்வது போல "Opposite poles attract towards each other" தத்துவம் வேலை செய்கிறது போலும்!யாரோ அன்னியராயிருந்த அவர்களிருவரையும் இறைவன் ion bondஐ விட இறுக்கமாய்ப் பிணைத்துவிட்டான்.
பிளேட்டுக்களைக் கழுவியவள் மேசையில் சாப்பாட்டைக் கொண்டுவந்து வைத்தாள்.இன்று மீன் சமைத்திருந்தாள். சாப்பிடும்போது அன்வர் கேட்டான் "சாப்பாட்டில கொஞ்சம் உப்பு கூட தானே?"
"ஏன் நேத்து புரியாணியை நல்லா... "என்று சொல்ல வாயெடுத்தவள் பொய்யாய் முறைத்துவிட்டு அவன் தலையில் ஓர் குட்டுப் போட்டாள். அவன் அவள் கையைப் பிடித்தபடி சிரித்தான். அவளும் சிரித்தாள். அவர்களின் அந்த உண்மையான சிரிப்பில் இரண்டரை வருடத் தாம்பத்தியத்தின் புரிதல் இருந்தது!

No comments:

Post a Comment